உன்னை தாழ்த்து Jeffersonville, Indiana, USA 63-0714E 1(சகோ. நெவில் சகோ. பிரன்ஹாமை அறிமுகப்படுத்துகிறார் - ஆசி). இப்பொழுது நான் அறிவிப்பு செய்யலாம் என்று கருதுகிறேன். ''சில குறிப்பிட்ட வரங்கள் இருக்கக் கூடும்: என்னை அப்படி பெரியவனாக நினைத்துக் கொள்ளுதல் போன்றவை“. (சகோ. பிரன்ஹாமும் சபையோரும் சிரிக்கின்றனர்). ஒவ்வொரு முறையும் இங்கு வரும் போது எனக்கு இன்பமாயுள்ளது. நாங்கள் உங்களுடன் தங்கின நேரம் முடிவை நெருங்குகிறது. எங்களுக்கு மற்றொரு கூட்டம் சிக்காகோவில் உள்ளது. வெகு விரைவில் என் குடும்பத்தை நான் அரிசோனாவுக்குக் கொண்டு செல்ல வேண்டும். அவர்கள் இன்னும் கோடை விடுமுறையை எங்கும் கழிக்கவில்லை. இன்னும் சில நாட்களில் அவர்களை நான் எங்காவது காரில் கூட்டிச் செல்ல வேண்டும். அதன் பிறகு ஒரு நாள், ஞாயிறன்று, நான் ஒருக்கால் வெளியே செல்வேன். அதற்கு அடுத்த வாரம் முதற்கொண்டு நான் சிக்காகோவில் கூட்டங்களைத் தொடங்குகிறேன். பிறகு நான் கூட்டம் முடிந்தவுடன் திங்கட்கிழமையன்று இங்கு வந்து, குடும்பத்தை அரிசோனாவுக்கு கூட்டிச் செல்லவேண்டும். 2நீங்கள் எல்லோரும் புத்துணர்ச்சியோடு உள்ள ஞாயிறு காலை வேளையில் வந்து ஆராதனையை நான் எடுத்துக் கொள்வது எனக்குப் பிடிக்கவில்லை. (ஞாயிறு இரவில் நீங்கள் எப்பொழுதும் களைப்பாக இருக்கிறீர்கள்). அந்த நேரத்தில் ஆராதனையை நம் போதகர் நெவிலுக்குக் கொடுப்பது மோசமானது. அப்படிச் செய்ய எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால் ஞாயிறு இரவில் நான் ஆராதனை நடத்தினால், ஜனங்களை நீண்ட நேரம் வைத்துக் கொள்கிறேன். அவர்களில் அநேகர் தென் பாகத்திலிருந்தும் வட பாகத்திலிருந்தும் இங்கு வருகின்றனர். சில சமயங்களில் ஒரே ஒரு ஆராதனையில் இங்கு கலந்து கொள்ள அவர்கள் இரவும் பகலும் காரோட்டி இங்கு வந்து, திரும்பிச் செல்கின்றனர். ஆகவே திரும்பிச் செல்ல அவர்களுக்கு தருணம் அளிக்க வேண்டும் என்பதற்காகவே இங்கு வரும்போது நான் ஞாயிறு காலையில் ஆராதனை நடத்துகிறேன். விசுவாசமுள்ள யாத்திரீகர், அவர்களை எவ்வளவாகப் பாராட்டுகிறேன் அவர்கள் பனிகட்டி வழியாகவும், மழையிலும், நாட்டை கடந்து, ஒரே ஒரு சிறு ஆராதனைக்கென நூற்றுக்கணக்கான மைல்கள் பிரயாணம் செய்து வருகின்றனர். இவர்களுடைய இந்த பெரிய ஆதரவும் நான் ஜனங்களிடம் கூறுவது சத்தியமென்று அவர்கள் உணர்ந்திருப்பதும், என்னை தேவனுக்கும் இந்த ஜனங்களுக்கும் நன்றியுள்ளவனாக இருக்கச் செய்கிறது. 3இது சத்தியமென்று நான் விசுவாசிக்கிறேன். நான்... என் முழு இருதயத்தோடும். இதைக் காட்டிலும் மேலான ஒன்று இருப்பதாக நான் அறிந்திருந்தால், நானே நிச்சயமாக முதலில் செல்வேன். நான் முதலில் சென்று அது சரியா தவறா என்று கண்டுபிடிக்காமல், யாரையும் அவ்விடத்துக்கு செல்லும்படி சொல்ல மாட்டேன். நான் ஏற்கனவே தேவனில் அடியெடுத்து வைத்து அது சத்தியம் என்று அறியாத ஓரிடத்துக்கு, எவரையும் அடியெடுத்து வைக்கும்படி கூறமாட்டேன். முதலாவதாக அது கர்த்தருடைய வார்த்தையாக இருக்க வேண்டும். பிறகு நான் அதை ஆராய்ந்து அது சரியாவென்று காணவேண்டும். அது சரியாயிருந்தால், “இந்த வழியாக வாருங்கள்'' என்று நான் பிறகு கூறுவேன். பாருங்கள், அது வழியை உண்டாக்குதல். எந்த ஒரு போதகரும் அவ்வாறு செய்ய வேண்டும், அவரே முதலில் செல்ல வேண்டும் என்பது என் கருத்து. அவர் ஜனங்களின் வழி காட்டியாக கருதப்படுபவர். அவரே தன்னை ஈடுபடுத்திக் கொள்ள விரும்பாத ஒன்றைக் குறித்து பேசக் கூடாது. நாம் ஜனங்களின் வழிகாட்டிகள் என்ற முறையில் அங்கு முதலில் செல்ல வேண்டும். 4இன்று காலை எனக்கு பிரசங்க பீடத்தின் மேல் ஒருவிதமான அனுபவம் நிகழ்ந்தது. அது செய்தியின் கடைசி பாகத்தைக் குறித்தது. நான் அவ்வாறு கூற நினைக்கவில்லை. பாருங்கள்? அது ஏற்கனவே கூறப்பட்டுவிட்டது, அதைக் குறித்து இப்பொழுது நான் ஒன்றும் செய்ய முடியாது. நான் வீட்டுக்குச் சென்று அதை படித்துப் பார்த்தேன். அன்று என் குடும்பத்தின் அங்கத்தினர்கள் மறுபடியும் ஒன்று கூடினோம்- என் சகோதரனும் அவன் குடும்பத்தினரும். அம்மா இறந்து விட்டார்கள். முன்பெல்லாம் அவர்களுடைய வீட்டில் நாங்கள் கூடுவது வழக்கம்.இப்பொழுது நாங்கள் அதற்கென்று டெலோராஸ் வரை செல்கிறோம். இன்று பிற்பகல் எங்களுக்கு மகிழ்ச்சியான தருணம் உண்டாயிருந்தது. நாங்கள் அளவளாவினோம். டெட்டி (Teddy) அங்கிருந்தான். அவன் எங்களுக்கு சில பாடல்களைப் பாடி, சில பாடல்களை வாத்தியக் கருவியில் வாசித்து எங்களை மகிழ்வித்தான். 5கர்த்தருக்கு சித்தமானால், சகோ. நெவிலுக்கு ஆட்சேபனை எதுவுமில்லையென்றால், அடுத்த ஞாயிறு காலையில் சுகமளிக்கும் ஆராதனை ஒன்றை நடத்தலாம் என்று உத்தேசித்துள்ளேன். அது சுகமளிக்கும் ஆராதனையாக மட்டுமே இருக்கும். இன்றைய காலை செய்தியில், நான் அவ்விதமாக அதைக் கூற தேவன் என்னை ஏவினதை சிந்தித்துப் பார்க்கும் போது, நாம் உண்மையில் விசுவாசிக்க அது நம்மை உற்சாகப்படுத்த வேண்டும். நாம் விளையாடிக் கொண்டு, வெவ்வேறு காரியங்களைக் குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் பலப்பரீட்சை வரும் போது, அது வித்தியாசமான ஒன்று. 6யாரோ ஒருவர் இன்று இந்த கதையை என்னிடம் கூறினார். அது பின்னால் உட்கார்ந்து கொண்டிருக்கும் என் சகோதரன் என்று நினைக்கிறேன். அது ஒரு போதகருக்கும் அவருடைய சபையோரில் ஒருவருக்குமிடையே நடந்த உரையாடல். போதகர், ஒரு மரக்கட்டையைத் தூக்கிக் கொண்டு தன்னால் நடக்க முடியுமென்று கூறினார். அப்பொழுது மற்றவர், ''போதகரே, நீங்கள் நிச்சயம் அப்படி செய்ய முடியும். கர்த்தர் உங்களோடு கூட இருக்கிறார்'' என்றாராம். ''நான் மரக்கட்டையை முதுகில் சுமந்து நடக்கமுடியும். ''நிச்சயம் செய்வீர்கள். தேவன் உங்களோடு கூட இருக்கிறார்''. அவர் அப்படியே செய்து காண்பித்தார். பின்னும் போதகர், ''நான் ஒரே நேரத்தில் மரக்கட்டையை முதுகில் சுமந்து வண்டியையும் தள்ளி நடக்க முடியும்'' என்றாராம். ''நிச்சயம் செய்வீர்கள், போதகரே. கர்த்தர் உங்களோடு கூட இருக்கிறார். உங்கள் விசுவாசம் எதையும் சாதிக்கும்''. போதகர், ''உங்களை வண்டியில் அமர்த்தி அதை தள்ளி , கட்டையை முதுகில் சுமந்து என்னால் செல்ல முடியும்'' என்றாராம். அப்பொழுது மற்றவர், “ஒரு நிமிடம் பொறுங்கள்'' என்றார். பாருங்கள்? நீங்களே அதில் சேர்க்கப்படும் போது அது வித்தியாசமாகிவிடுகிறது. பாருங்கள்? இங்கு நாம் “ஆமென்” என்று கூறிக் கொண்டிருப்பது மிகவும் நல்லதே. ''அது உண்மையென்று விசுவாசிக்கிறேன்'' என்று கூறுவதும் மிகவும் நல்லதே. ஆனால் அதை செயல்படுத்த வேண்டும். நீங்கள் அதை செயல்படுத்த வேண்டும். 7இன்று காலை நான் கூறினது போல், ஜனங்கள் பேதுருவின் நிழலில் கிடத்தப்பட்டனர். அவர்களுக்காக ஜெபிக்க வேண்டும் என்று அவர்கள் கேட்கவேயில்லை. இது அநேகர் வீடுகளில் நடப்பதை நான் கண்டிருக்கிறேன்... அங்கு போவதற்கு முன்பு நான் ஜெபித்து செல்வேன். அந்த அபிஷேகத்துடன் அங்கு சென்று, அங்குள்ள ஜனங்களுக்கு ஜெபம் பண்ணாமல், வெளியே நடப்பேன். அவர்கள் சுகமடைந்து விடுவார்கள். பாருங்கள்? பாருங்கள்? பலமுறை அவ்வாறு நிகழ்வதை நான் கண்டிருக்கிறேன். பாருங்கள்? நீங்கள் எங்காவது ஓரிடத்தில் உங்கள் விசுவாசத்தை வைக்க வேண்டும். பாருங்கள்? நீங்கள் அதை விசுவாசிக்க வேண்டும். அந்த நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்று நம்புகிறேன், அது இப்பொழுது வந்திருக்கிறது. இந்த செய்தி ஒலிப்பதிவு செய்யப்படவில்லையென்று நினைக்கிறேன். அவர்கள் ஒருக்கால் தங்களுக்கென ஒலிப்பதிவு செய்துக் கொள்ளலாம். ஆனால் இந்த ஒலிநாடா நாடு முழுவதிலும் அனுப்பப்படாது. 8இன்று காலை இதைக் குறித்து நான் பேசிக் கொண்டிருந்தேன். அது நம்மை ஒரு உச்சக்கட்டத்துக்கு கொண்டு வந்து விட்டது. ஆகையால் தான் அடுத்த ஞாயிறு நான் சுகமளிக்கும் ஆராதனை ஒன்றை நடத்தப் போகின்றேன். ஏனெனில் நான் வீடு திரும்பிய முதற்கொண்டு எனக்குக் கிடைக்கப்பெற்ற தரிசனங்களைக் குறித்தும் என்ன நடந்தது என்பதைக் குறித்தும் உங்களுக்கு எடுத்துரைத்து, இவைகளையெல்லாம் நான் ஏன் செய்தேன் என்பது வரைக்கும் கூறினேன். அதன் பிறகு இன்று காலை அந்த கடைசி இழுப்பு வரைக்கும் அதைக் கொண்டு வந்தேன். இப்பொழுது நான் தேவனுக்கு என்னை அர்ப்பணிக்க வேண்டிய தருணம், தேவன் என்னுடன் பேச வேண்டிய தருணம். பாருங்கள், என் வாழ்க்கையில் சிறிது மாறுதல் ஏற்பட வேண்டும். நான் பொல்லாங்கன் என்று கூறுவதனால் அல்ல, ஆனால் ஜனங்களிடம் இன்னும் சிறிது அதிகம் நெருங்கியுள்ள உணர்ச்சியைப் பெற விரும்புகிறேன். பாருங்கள்? 9இந்த சுவிசேஷ சத்தியத்தை நான் எடுத்துரைத்த மக்கள், அதற்கு தங்கள் முதுகைக் காட்டி, அதனின்று நடந்து சென்று அதைப் பார்த்து சிரிக்கின்றனர். எனக்கு அது சுவிசேஷத்தை இழிவுபடுத்துவதாகும். என்னை இழிவுபடுத்தினால் எனக்குக் கவலையில்லை. ஆனால் நான் கூறிவரும் சத்தியம், அது அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்னும் நோக்கத்துக்காகவே. ஒரு படகை வெள்ளத்தில் தள்ளிவிட்டு, “இதோ படகு உள்ளது, கடந்து செல்லுங்கள்! வெள்ளத்தின் மட்டம் அதிகரித்துக் கொண்டு வருகின்றது, அதிலிருந்து விலகிச் செல்லுங்கள். இல்லையென்றால் நீங்கள் மூழ்கி இறந்துவிடுவீர்கள். நீங்கள் வெள்ளத்தில் அழிந்து போவீர்கள்'' என்று கூறுவது போல் இது. அவர்களோ உங்களைப் பார்த்து கேலியாக சிரித்துவிட்டு நடந்து சென்றுவிடுகின்றனர். அவர்கள் அப்படி நடந்து சென்றுவிட்டால், அதைக் குறித்து வேறொன்றும் என்னால் செய்ய முடியாது, பாருங்கள், என்னால் ஒன்றுமே செய்யமுடியாது. ஆனால் நான் கரைக்கு இப்பொழுது ஓடி ”திரும்பி வாருங்கள்'' என்று முறையிட விரும்புகிறேன். பாருங்கள், எனக்கு அப்படிப்பட்ட உணர்வு இருந்தாக வேண்டும். ஏனெனில் இன்னும் உள்ளே வராதவர் அங்குள்ளதை அறிகிறேன். நான் அதுவரைக்கும் மீன் பிடிக்கப் போகின்றேன். அவர், ''கடைசி மீன் அகப்படும் வரைக்கும்'' என்றார். அதை இப்பொழுதே செய்ய விரும்புகின்றேன். அப்படி செய்வதற்கென, ஜெபக் கூட்டத்தில் ஏதாவதொன்று நடக்குமென்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஏதாவதொன்று... அந்த கடைசி இழுப்பைக் குறித்த தரிசனம் உங்களில் பலருக்கு ஞாபகமிருக்கும் - அதாவது மூன்றாம் இழுப்பு. அதற்கு முன்பு ஒன்று நடந்தது என்று உங்களுக்கு நினைவிருக்கும். அந்த ஒளி வந்து, அந்த இடத்துக்கு செல்வதைக் கண்டேன். அது ''உன்னை அங்கு சந்திபேன்“ என்றது. அப்பொழுது நான் ஏதோ ஒன்று நடக்க எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். 10பல ஆண்டுகளுக்கு முன்பு, இந்த ஆராதனைகளும் சிந்தனைகளைப் பகுத்தறிதலும் என்னை பலவீனமாக்கி, நான் தள்ளாடுவது வழக்கம். உங்களில் அநேகருக்கு அது ஞாபகமிருக்கும். அந்நிலையில் சகோ. ஜாக் மூர் என்னுடைய ஒரு கையையும், சகோ. ப்ரவுன் மற்ற கையையும் பிடித்துக் கொண்டு, ஆராதனைக்கு பிறகு ஒரு மணி நேரம் வீதியில் மேலும் கீழும் நடக்கச் செய்வார்கள். நான் எங்கிருக்கிறேன் என்றும், என்ன நடந்து கொண்டிருக்கிறது என்றும் நான் சிந்தித்துப் பார்ப்பதுண்டு. பிறகு இரவு முழுவதும் படுத்துக் கொண்டு, அதைக் குறித்து யோசித்து, கதறியழுது, அவர்கள் ஏன் கர்த்தராகிய இயேசுவை ஏற்றுக் கொள்ளவில்லை என்று வியந்ததுண்டு. பிறகு அவர் என்னிடம் ஒரு தரிசனத்தில், ''பழுப்பு நிற 'சூட்' அணிந்து கொண்டு, கம்பளியால் சுற்றின குழந்தையைக் கையிலேந்தினவளாய் ஒரு பெண் உன்னிடம் வருவாள். அன்று முதற்கொண்டு நீ பெலப்பட்டு, இதைத் தாங்க போதிய பலத்தைப் பெற்றிருப்பாய்'' என்றார். இதைக் குறித்து உங்களிடம் நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன். அது சிக்காகோவில் ஒரு இரவு நிறைவேறினது. அன்றிரவு அந்த பிரஸ்பிடேரியன் பெண்ணைக் குழந்தையுடன் அவளுடைய போதகர் அங்கு அனுப்பினார். 11அவளுடைய கணவரின் சகோதரர், அல்லது வேறு யாரோ ஒருவர், ஒரு மருத்துவர். அவர், ''சர்வ வல்லமையுள்ள தேவன் அந்த குழந்தையைத் தொட்டாலன்றி அதற்கு விமோசனமே இல்லை'' என்று கூறிவிட்டார். அவள் சென்று அதை போதகருக்கு அறிவித்தாள். போதகர், ''இந்த தெய்வீக சுகமளித்தலை நடத்த எனக்குத் தகுதியில்லை. அதை செய்ய அவசியமான விசவாசம் எனக்குள் இல்லை'' என்றார். அவர் உத்தமமாக அதை ஒப்புக் கொண்டார். பாருங்கள்? அவர், ''அது எனக்குள் இல்லை. ஆனால் சகோ. பிரன்ஹாமின் கூட்டம் ஒன்றிற்கு சென்றிருக்கிறேன். குழந்தையை சகோ. பிரன்ஹாமிடம் கொண்டு செல்ல ஆலோசனை கூறுகிறேன்'' என்றார். மருத்துவர் கைவிட்டார், அது மரணத் தருவாயில் இருந்தது. 12எரிந்து போன பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்த கத்தோலிக்க பிள்ளைகளுக்கு நான் ஒரு விதமான ஆராதனை நடத்திக் கொண்டிருந்தேன். அது எப்பொழுது எரிந்து போனது என்று உங்களுக்கு ஞாபகமிருக்கும். நாங்கள் ஆராதனை நடத்திக் கொண்டிருந்தபோது, இந்த பெண் பழுப்பு நிற 'சூட்' அணிந்து மேடை மேல் வந்தாள். என் மனைவியும் மற்றவர்களும் அப்பொழுது அங்கிருந்தனர். நான் சொன்னேன்... அவர்கள் அங்கு நின்று கொண்டிருக்கிறார்களா என்று சுற்றுமுற்றும் பார்த்தேன். நான் மேடையின் மேல் வருவதற்கு சற்று முன்பு தான் பில்லி பாலும் மற்றவர்களும், இல்லை, என் மனைவியும் மற்றவர்களும் குழந்தையை வைத்து கொண்டிருந்த அந்த பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்தார்களாம். அந்த பெண் மேடையின் மேல் நடந்து வந்து போது, பரிசுத்த ஆவியானவர் எல்லாவற்றையும் வெளிப்படுத்தி அந்த குழந்தையை அங்கு சுகப்படுத்தினார். அன்று முதல் நான் களைப்படைவதில்லை, பாருங்கள், அது என்னைத் தொல்லைபடுத்துவதில்லை, நான் தொடர்ந்து செய்து கொண்டேயிருக்கிறேன். 13இந்த மூன்றாம் இழுப்பு செயல்படத் தொடங்க, ஏதாவதொன்று நடக்கக் காத்திருக்கிறேன், பாருங்கள். அது ஒருக்கால் அடுத்த ஞாயிறு காலை நடக்கவிருக்கும் சுகமளிக்கும் ஆராதனையில் நிகழக்கூடும். எனக்குத் தெரியாது. நான் நினைக்கிறேன், நாம் என்ன செய்ய வேண்டுமென்றால், வியாதியாயுள்ள உங்கள் ஜனங்களுக்கு அறிவித்து, அவர்களை இங்கு வரவழைக்க வேண்டும். சுகமளிக்கும் ஆராதனை நடத்துவதற்கு, நாம் வியாதிப்பட்டவர்களின் மேல் கவனம் செலுத்த வேண்டும். வியாதியாயுள்ள உங்கள் ஜனங்களை அடுத்த ஞாயிறு காலையில் நேரத்தோடு கொண்டு வாருங்கள் - எட்டு அல்லது எட்டரை மணிக்கு. அவர்கள் நுழையும் போதே அவர்களுக்கு ஜெப அட்டைகள் கொடுத்துவிடலாம், அவர்கள் எப்படி அதை விநியோகித்தாலும் சரி. அதன் பிறகு நாம் ஜெபவரிசையை அமைத்து, வியாதியஸ்தருக்கு ஜெபித்து, பரிசுத்தஆவி என்ன செய்வார் என்று பார்க்கலாம். அவரை நாம் விசுவாசித்தால், அவர் அற்புதங்களைச் செய்வார் என்று விசுவாசிக்கிறேன், பாருங்கள். ஆனால் அதற்காக இப்பொழுது அவரை நம்முடைய முழு இருதயத்தோடும் விசுவாசிக்கவேண்டும். அந்த மகத்தான நேரம் வந்துவிட்டதென்று நினைக்கிறேன். இன்று காலை நாம் பேசினதுபோல், நமக்கு அவ்வளவு நிறைய காண்பித்து, நம்மை ஒரு குறிப்பிட்ட நிலைக்கு கொண்டு வந்துவிட்டார். அந்த சிறு குன்றை நாம் கடக்க வேண்டும், அவ்வளவுதான் நமக்கு அவசியம், அதன்பிறகு அது போய்விடுகிறது. பாருங்கள், சிந்தனைகளைப் பகுத்தறிதல், தீர்க்கதரிசனம் போன்ற அதே காரியங்கள் இதுவரை நடந்து கொண்டிருக்கின்றன. நாம் கவனித்து வரவேண்டும். 14நான் கால்கரியில் நின்று கொண்டிருந்தேன். உங்கள் மன்னிப்பைக் கோருகிறேன், அது ரெஜீனாவிலுள்ள வீன் பட்டினம். அங்கு எர்ன் பாக்ஸ்டர் நின்று கொண்டிருந்தார், நாங்களும் சில பேர் அங்கிருந்தோம். கர்த்தர் இதே மேடையில் என்னிடம், ''அவர்களுடைய இருதயத்திலுள்ள இரகசியங்களை நீ அறிந்து கொள்வாய், அது நிறைவேறும்'' என்றார். அது உண்மையாக நிறைவேறினது. நான் அந்த விதத்தில் அதை யோசிக்கவில்லை. அன்றிரவு நான் எர்னுடன் மேடைக்குச் சென்று வியாதியஸ்தர்களுக்கு ஜெபிக்க தொடங்கினேன். அப்பொழுது ஒரு மனிதன் மேடைக்கு வந்து, தன் முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தான். சுகமளிக்கும் ஆராதனையில் அவ்வாறு ஒரு நொடிப்பொழுதில் நடப்பது அதுவே முதல் முறையாகும். நான் கூட்டத்தினரிடையே நோக்கின போது, அந்த ஒளி அவர்கள் மத்தியில் இறங்கத் தொடங்கிவிட்டது. ஓ, நாம் மறுகரையை அடையும் போது ஜனங்களுடைய வாழ்க்கையில் நடப்பதைக் கண்டு, இன்னும் பாதி கூட அறிவிக்கப்படவில்லை. அதைக் குறித்து நான் ஒன்றும் கூறவில்லை. நான் ஏதாவதொன்றைக் கூற அத்தியாவசியம் ஏற்பட்டாலொழிய, அதை நான் அப்படியே விட்டுவிடுகிறேன். அப்படி ஒன்று அடுத்தபடியாக தொடங்குவதற்காக நான் காத்திருக்கிறேன். பாருங்கள், தேவன், தம்முடைய சொந்த வழியில், தம்முடைய சொந்த இராஜாதிபத்திய நேரத்தில் அதை தொடங்குவார். மற்றவர்கள் செய்வதைக் காட்டிலும் இது அதிகம் மேன்மையுள்ளதாக இருக்கும். பாருங்கள்? அது நடப்பதற்காக நான் காத்திருக்கிறேன். 15அடுத்த ஞாயிறு சிறு சுகமளிக்கும் ஆராதனை ஒன்றை நடத்தலாமென்று நினைக்கிறேன். அதற்கடுத்த ஞாயிறு ஒருக்கால் நான் பிள்ளைகளுடன் வெளியே சென்றிருப்பேன். ஏனெனில் அவர்கள் பள்ளிக்கூடம் செல்ல வேண்டும். அதற்கும் அடுத்த ஞாயறின் போது, நான் கூட்டத்துக்காக சிக்காகோவில் இருப்பேன். நான் திங்களன்று திரும்பி வந்து பிள்ளைகள் பள்ளிக் கூடம் செல்வதற்கென செவ்வாயன்று இவ்விடம் விட்டு அரிசோனா செல்வேன். போதகரே, நீங்கள் எதைக் கண்டீர்கள்? (சகோ. நெவில், ''நான் மிகவும் விசித்திரமான ஒன்றைக் கண்டு பிடித்தேன்'' என்கிறார் - ஆசி). நல்லது, அது மிகவும் நல்லது, அதைக் குறித்து கேட்க நாங்கள் ஆவலாயிருக்கிறோம். ஆகவே இப்பொழுது - கர்த்தர் உங்கள் அனைவரையும் அதிகமாக ஆசீர்வதிப்பாராக. உங்களை அடுத்த ஞாயிறு காணுவேன் என நம்புகிறேன். புதன் இரவு... 16கவனியுங்கள், இந்த சிறு சபைகளை மறந்துவிடாதீர்கள் - சகோ. ரட்டல், சகோ. ஜாக்சன், சகோ. பார்னஸ் ஆகியோரின் சபைகளையும் இன்னும் அங்கு போராடிக் கொண்டிருக்கும் மற்ற சகோதரரின் சபைகளையும், பாருங்கள். நாம் அவர்களுடைய கூட்டாளி சபை என்னும் உணர்ச்சி அவர்களுக்குண்டு. பாருங்கள். நாம் அவர்களுக்கு ஒரு விதத்தில் தாய்க்குழு. ஏனெனில் அந்த போதகர்கள் இந்த சபையில்தான் பிறந்தனர். பின்னால் உள்ள இந்த நபர், சகோதரன். அவரை அங்கு அன்றொரு இரவு சந்தித்தேன் - ஆலன், சகோ. ஆலன். சகோ. காலின்ஸ், சகோ. ஆலனை அறியாமலிருந்தால், அவர் தம்மை அறிமுகப்படுத்திக் கொள்வார் என்று நம்புகிறேன். அவர்கள் இருவருமே மெதோடிஸ்டு போதகர்களாயிருந்து அதன் பிறகு வசனத்தின் சத்தியத்தை அறிந்து கொண்டவர்கள். 17மெதோடிஸ்டு ஸ்தாபனத்தில் அருமையானவர்கள் உள்ளனர். அவர்கள் அருமையானவர்கள் அல்ல என்று எண்ணிவிட வேண்டாம். அவர்கள் அருமையானவர்களே. அவ்வாறே கத்தோலிக்க சபையிலும் அருமையானவர்கள் உள்ளனர். பிரஸ்பிடேரியன் சபையிலும் அருமையானவர்கள் உள்ளனர். இவ்விடங்கள் அனைத்திலும் ஒளி தங்கள் பாதையில் பிரகாசிப்பதைக் காண ஆண்களும் பெண்களும் காத்துக் கொண்டிருக்கின்றனர். நீங்கள் தாழ்மையோடும் இனிமையோடும் ஒளியைப் பிரகாசித்துக் கொண்டிருங்கள். நம்மைத் தாழ்த்தி தேவனிடத்தில் இன்னும் நெருங்கி வளருவோம். பாருங்கள்? 18மறந்து விடாதீர்கள், இந்த கூடாரம் தன் அங்கத்தினர்களின் எண்ணிக்கையை இழக்கும். சாத்தான் இதை இலக்காக வைத்து, நரகத்திலுள்ள துப்பாக்கி அனைத்தையும் இதற்கு விரோதமாக குறி வைத்திருக்கிறான். ஒருவர் மற்றொருவரின் கருத்துக்கு முரணாக ஏதாவதொன்றைச் செய்யும்படி அவன் தூண்டுவான். அவன் அதை செய்து கொண்டிருக்கிறான். அதுவே அவன் பணி. அவன் ஒருவருக்கு விரோதமாக மற்றவர், ''கவனியுங்கள், இன்னார் இன்னார் இதை செய்தாரென்று உங்களுக்குத் தெரியுமா?'' என்று பேசும்படி செய்வான். அதற்கு செவி கொடுக்காதீர்கள். அதற்கு செவி கொடுக்கவே வேண்டாம். அது பிசாசு. பாருங்கள், அது சாத்தான். அதை விசுவாசிக்காதீர்கள். யாராகிலும் ஒருவர் தவறு செய்தால், அவருக்காக ஜெபியுங்கள். சுயநல விதத்தில் ஜெபம் செய்து , “அது என் கடமை. அந்த சகோதரனுக்காக நான் ஜெபம் செய்ய வேண்டும்'' என்று சொல்லாதீர்கள். நீங்கள் உண்மையில் இருதயத்தின் ஆழத்திலிருந்து அந்த சகோதரிக்காக ஜெபம் செய்யுங்கள். நீங்கள் பேசி இனிமையாயிருங்கள். முதலாவதாக என்ன நடக்கும் தெரியுமா, அவர்கள் ஆராதனைக்கு மறுபடியும் வருவதைக் காண்பீர்கள். பாருங்கள்? ஏனெனில் நாம் எல்லோரும் சூரிய அஸ்தமனத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். 19கர்த்தராகிய இயேசு இந்நாட்களில் ஒன்றில் வரப்போகிறார். அது சடுதியாகவும் இனிமையாகவும் இருக்கும். எடுத்துக் கொள்ளப்படுதல் நிகழும் போது, உலகிலுள்ளவர்களில் ஒரு சதவிதத்தில் நூறில் ஒருவர் கூட அதை அறியமாட்டார்கள். அது மிகவும் அமைதியாக நடக்கும், யாருமே அதைக் குறித்து ஒன்றுமே அறியமாட்டார்கள். பாருங்கள்? ஆனால் சிறு சிறு குழுக்கள், “இன்னார் இன்னார் எங்கே?'' என்று கேட்பார்கள். “ஓ, மூட மதாபிமானக் கூட்டம் ஒன்று அங்கிருந்தது. அது இங்கிருந்து மேலே சென்றுவிட்டதாக அவர்கள் கூறுகின்றனர். அது உண்மையல்ல. அவர்கள் எங்கோ சென்றுவிட்டார்கள். அப்படிப்பட்ட மூட மதாபிமானத்தை நாங்கள் கண்டிருக் கிறோம்''. “ஜெபர்ஸன்வில் என்னுமிடத்தில் ஒரு சிறு கூடாரம் இருந்ததென்று அவர்கள் கூறுகின்றனர். அதன் அங்கத்தினர் பலர் காணாமற் போய்விட்டனராம்.'' பாருங்கள், அவர்கள் அதை விளையாட்டாக எண்ணு கின்றனர். அவர்கள், ''அதெல்லாம் ஒன்றுமில்லை'' என்று சொல்வார்கள். ஆனால் அது ஏற்கனவே நிகழ்ந்திருக்கும், அவர்கள் அதை அறிந்திருக்கமாட்டார்கள். 20உலகம் முழுவதிலும், கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருந்து காணப்படுவார்கள். எடுத்துக் கொள்ளப்படுதல் நிகழும். சபை வீட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படும். அதன் பிறகு உபத்திரவ காலம் தொடங்கும். ஓ, என்னே, அந்த காலத்தில் இங்கிருக்க எனக்கு விருப்பமில்லை. நாம் எவருமே அக்காலத்தில் இங்கு இராதபடி தேவன் தடை செய்வாராக. ஏனெனில் ''அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும். நீதியுள்ளவன் இன்னும் நீதி செய்யட்டும்.“ (வெளி. 22:11). ஆட்டுக் குட்டியானவர் மீட்பின் புத்தகத்துடன் புறப்பட்டு வந்து, மணவாட்டி எடுத்துக் கொள்ளப்பட்டுவிட்ட பிறகு, அதைப் புறக்கணிக்கிறவர்கள்- யூதர் புறஜாதியார் இருவருமே- உபத்திரவ காலத்துக்குள் பிரவேசிக்க வேண்டும். என்ன ஒரு உபத்திரவ காலம்! எனக்கு அது வேண்டாம். “கர்த்தாவே, இப்பொழுது என்னைப் பரிசுத்தமாக்கும்.'' அது நல்ல நசரின் போதகம், இல்லையா? (சகோ. நெவில் ''ஆமென்” என்கிறார் -ஆசி). அது உண்மையும் கூட. அது உண்மை . அது சரி. ''ஆண்டவரே, உமது பரிசுத்த ஆவியினால் என்னை நீரப்புவீராக. கர்த்தாவே, இப்பொழுதே உலகம் அனைத்தையும் என்னை விட்டு எடுத்துப் போடும். எனக்கு ஒன்றும் வேண்டாம்...'' அந்த வயோதிப கறுப்பு நிறமுள்ள சகோதரன், “ஐயா, பயணச்சீட்டை என் கையில் வைத்திருக்கிறேன். அது ஏற்கனவே துவாரமிடப்பட்டுவிட்டது (punched). அன்று காலை நான் நதிக்கரைக்கு வரும் போது, எனக்கு எந்தவித தொல்லையும் இருக்கக்கூடாது” என்று கூறினது போல். அது மிகவும் உண்மை . எனக்கு எந்த தொல்லையும் வேண்டாம். பயணச்சீட்டை உங்கள் கையில் வைத்திருங்கள். ஏனெனில் நாம் கடந்து செல்லப் போகிறோம். சற்று சிந்தித்துப் பாருங்கள், மீட்பின் மகத்தான நேரம் சமீபமாயுள்ளது. 21இப்பொழுது மற்றுமொரு காரியம். சகோதரனே, ஊடிகாவிலுள்ள அவருடைய பெயர் என்ன? சகோ. கிரகாம் என்று நினைக்கிறேன். அங்கு போதகராயுள்ள மற்றொரு சகோதரனின் பெயர் என்ன? சகோதரன் ஷாங்க்ஸ் அல்லது சிங்க், அப்படி ஏதோ ஒரு பெயர் (சகோ. நெவில், ''சகோ. ஸ்நெல்லிங்'' என்கிறார்- ஆசி). சகோ. ஸ்நெல்லிங் இப்பொழுது ஊடிகாவில் போதகராயுள்ளார். அவருக்கு கட்டிடம் உண்டு. நான் நினைக்கிறேன் அவர்களுடைய ஜெபக் கூட்டம்... (''வியாழன் இரவு“). வியாழன் இரவு. நாம் வியாழன் இரவு அங்கு சென்று அங்குள்ளவர்களுடன் நமது ஐக்கியத்தை காண்பித்தால் நலமாயிருக்கும். பாருங்கள்? பிறகு சகோ. ஜாக்சன் தனது கூட்டத்தை வைக்கும் போதும் நம்மில் ஒரு சிறு கூட்டம் அங்கு செல்லலாம். 22ஜெபித்துக் கொண்டிருங்கள், தோண்டிக் கொண்டேயிருங்கள்! ஆம், நிறுத்தாதீர்கள். எலியா அவர்களிடம், ''அங்கு வாய்க்காலைத் தோண்டுங்கள்'' என்று சொன்னது போல். நீங்கள் தோண்டும் போது, ஒரு பழைய தகர டப்பா நான் அதிக களைப்புற்றிருக்கிறேன்'' என்று கூற கேட்டால், அதை தூர எறிந்துவிட்டு, தோண்டிக் கொண்டிருங்கள். பாருங்கள்? தோண்டிக் கொண்டேயிருங்கள். ஏனெனில் நாம் தோண்ட வேண்டும். அவ்வளவுதான். நீங்கள் உபத்திரவகாலத்தில் பிரவேசிக்காதிருக்க விரும்பினால், நீங்கள் தோண்டத் தொடங்குவது நலம். இங்கு எனக்கும் நான் பிரசங்கித்துக் கொண்டிருக்கிறேன். நான் முன்னைக் காட்டிலும் அதிக ஆழமாகத் தோண்டப் போகிறேன். ஏனெனில் இந்த நாட்டிலும் உலகம் பூராவிலும் - இந்த ஊழியத்தைக் குறித்து உலகமெங்கும் அறிந்துள்ளபடியால் நான் மறுபடியும் செல்ல வேண்டும். 23என் மனைவி... அன்றொரு காலை நான் அவளிடம், ''நான் புறப்படும் போது நீயும் என்னுடன் வர வேண்டும். கர்த்தருக்கு சித்தமானால், நான் ஜனவரி மாதத்தில் புறப்படுவேன். நான் உலகம் பூராவும் பயணம் செய்துவிட்டு, திரும்பி வந்து, அடுத்த கோடை காலத்தின் போது அமெரிக்க ஐக்கிய நாடுகளில் கூட்டம் நடத்தலாம் என்றிருக்கிறேன்'' என்றேன். அவள், “பயணத்துக்கு எனக்கு அதிக வயதாகிவிட்டது'' என்றாள். நான், 'நல்லது, நான் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு என் முந்தின வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டேன். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்ற போது நான் இருந்ததைக் காட்டிலும் இப்பொழுது நான் மேலான நிலையில் இருக்கிறேன். அதைக் குறித்து இப்பொழுது நான் மேலான நிலையில் இருக்கிறேன். அதைக் குறித்து இப்பொழுது நான் அதிகம் அறிந்திருக்கிறேன்'' என்றேன். 24அதன் பிறகு நாங்கள் இந்த பொருளின் பேரில் பேசினோம். அதாவது,''கர்த்தர், உனக்கு நான் இருபத்தைந்து ஆண்டுகள் கூட்டித்தரப் போகிறேன். உனக்கு வயதாகிவிட்டது. உன்னால் செல்ல முடியும். உனக்கு இவ்வுலகில் இருபத்தைந்து ஆண்டுகளை தெரிந்து கொள்வாயா, அல்லது இருபத்தைந்து முதல் ஐம்பது, ஐம்பது முதல் எழுபத்தைந்து, எழுபத்தைந்து முதல் நூறு ஆண்டுகளா?'' என்பதே. இவ்வுலகில் ஒரு மனிதனுக்கு எந்த நேரமும் அருளப்பட்டு, அவன் அந்த நேரத்தை தேவனுடைய ஊழியத்தில் செலவிடாமல் போனால், அதுமிகவும் யோசனையற்ற செயலாயிருக்கும். அவன் என்ன செய்கிறான் என்று எனக்கு கவலையில்லை. நீ பெண்களுடைய இருதயம் உடைவது போல் நடந்து கொள்வாயானால், நீ வாலிப வயதை, முதல் இருபத்தைந்து ஆண்டுகளைத் தெரிந்து கொள்ளுதல் நலம். பாருங்கள்? நீ தச்சனாக, இயந்திரம் பழுது பார்ப்பவனாக, அப்படி ஏதாவதொரு பணி செய்ய விரும்பினால், இரண்டாம் இருபத்தைந்து ஆண்டுகளைத் தெரிந்துகொள்ளுதல் நலம்.பாருங்கள்? 25பிறகு நான், '' என்னை குறித்தென்ன, நான் எதை தெரிந்து கொள்வேன்?'' என்று சிந்திக்கத் தொடங்கினேன். நான் எழுபத்தைந்து முதல் நூறு ஆண்டுகளையே தெரிந்து கொள்வேன். நான் அதிக ஞானமுள்ளவனாக இருப்பேன். நான் அதிகமாக நிலையாயிருப்பேன். நான் என்ன செய்கிறேன் என்பதைக் குறித்து அதிகம் அறிந்திருப்பேன். நான் சென்றமுறை வெளிநாடு சென்றபோது இருந்ததைக் காட்டிலும் எனக்கு இப்பொழுது எட்டு அல்லது பத்து வயது அதிகமாகிவிட்டது. இப்பொழுது நான் பாம்புகளைக் கொல்வது போல் குதிக்கமாட்டேன். அதைக் குறித்து நான் அதிகம் அறிந்திருப்பேன், பாருங்கள், அதிகம் அறிந்திருப்பேன். அது 'கூன்' (coon) என்னும் மரமேறும் மிருகத்தை பிடிக்கும் நாயைப் போல், பாருங்கள். அதை எப்படி பிடிப்பதென்று உங்களுக்குத் தெரியும். அங்கு நீங்கள் குதித்தால், அது உங்களை பீறிவிடும். பாருங்கள், அதன் உபாயங்களை நன்கறிந்து அது என்ன செய்கிறதென்று கவனிக்க வேண்டும். நாம் சத்துருவைக் குறித்து அதிகம் அறிந்து கொள்ள வேண்டும். எனவே அவன் திறமை அனைத்தும் நன்கறிந்தவர்களாய், அவன் எப்படி அணுகுகிறான் என்றும், அவன் என்ன செய்கிறான் என்றும், அவனுடைய குத்துக்களைக் குறித்தும் கற்றறிந்து, அதற்கேற்ப பயிற்சி பெற்று அவனை சந்திக்க வேண்டும். பாருங்கள். எனவே நான் என் மனைவியிடம், ''எனக்கு நாற்பது வயதான போது இருந்ததைக் காட்டிலும் இப்பொழுது நான் மேலான நிலையில் உள்ளேன் என்று நினைக்கிறேன்“ என்றேன். பாருங்கள், இப்பொழுது எனக்கு ஐம்பத்து நான்கு வயதாகிறது. நான் உயிர் வாழ்ந்து, என்னுடைய நூறாவது வயதில் இப்பொழுது போலவே என்னால் எல்லாவற்றையும் செய்ய முடிந்தால்... இயேசு அவ்வளவு காலமாக வரத் தாமதிப்பாரானால், எடுத்துக் கொள்ளப்படுதலில் செல்ல நான் இப்போதைக் காட்டிலும் அப்போது மேலான நிலையில் இருப்பேன். பாருங்கள்? ஏனெனில், அதைக் குறித்து நான் அதிகம் அறிந்திருப்பேன், நான் என்ன செய்ய வேண்டுமென்றும், நிலைமையை எப்படி கையாளுவதென்றும் அப்பொழுது நான் அதிகம் அறிந்திருப்பேன். 26இப்பொழுது ஜனங்களில் அநேகரை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு அறுவை சிகிச்சை நடத்த வேண்டுமென்றால், “இப்பொழுது தான் பட்டம் பெற்று மருத்துவக் கல்லூரியிலிருந்து வெளி வந்த ஒரு புது மருத்துவர் உள்ளதாக கேள்விப்படுகிறேன். அவர் இதுவரைக்கும் ஒரு அறுவை சிகிச்சை கூட செய்ததில்லையாம். அவர் எனக்கு அறுவை சிகிச்சை செய்யட்டும்” என்று கூறுவார்கள் என்று நினைக்கிறீர்களா? நீங்கள், ''ஓ, முடியாது. முடியவே முடியாது. அந்த மருத்துவர் வேண்டாம். வேண்டாம் ஐயா, வேண்டவே வேண்டாம். அவர் கத்தியை என் மேல் வைக்க வேண்டாம். நான் மற்றைய மருத்துவமனைக்குச் சென்று இன்னார் இன்னாரிடம் செய்து கொள்வேன். அவருக்கு நிறைய அறுவை சிகிச்சை செய்த அனுபவம் உள்ளதாகக் கேள்விப்படுகிறேன். அதை எப்படி செய்வதென்று அவருக்குத் தெரியும்'' என்பீர்கள். அதுதான், பாருங்கள். அது தான் கருத்து. இதைக் குறித்தே நீங்கள் இப்படி யோசித்தால், உங்கள் ஆத்துமாவைக் குறித்து நீங்கள் எவ்வளவு அதிகமாக யோசிக்க வேண்டும். பாதையை அறிந்து, அதில் பிரயாணம் செய்து, தான் எங்கு நின்று கொண்டிருக்கிறார் என்று அறிந்துள்ள ஒருவரையே நான் அதற்காக தெரிந்து கொள்வேன். ஆம், நிச்சயமாக. 27கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. சரி, சகோ. நெவில் இப்பொழுது எழுந்து வாருங்கள். தேவன் சகோ. நெவிலை ஆசீர்வதிப்பாராக. மறந்து விடாதீர்கள், அடுத்த ஞாயிறு. (சகோ. நெவில் ஒரு நிமிடம் சகோ. பிரன்ஹாம், சகோ. வேயில் இருவரைக் குறித்தும் பேசிவிட்டு, அதன் பிறகு, ''நான் தேவனுடைய ஊழியக்காரர்களை- முக்கியமாக இதில் எங்களுடன் ஒத்துழைத்து எங்களுடன் இதில் இருப்பவர்களை- வரவேற்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. அவர்கள் பேசுவதை கேட்க நான் ஆவல் கொள்கிறேன்). ஆமென். (எனவே நான் டாக்டர் லீ வேயிலிடம், “சகோ. பிரன்ஹாம் பிரசங்கம் செய்யாவிட்டால் நீங்கள் செய்வீர்களா?' என்று கேட்டேன். சகோ. பிரன்ஹாம் பிரசங்கம் செய்யவில்லை. ஒருக்கால் அவர் அதை ஏற்கனவே அறிந்திருக்கக்கூடும்'' என்கிறார்). இல்லை, அவர் அறியவில்லை, நான் அறிந்திருந்தால், இவ்வளவு நேரம் பேசியிருக்கமாட்டேன். 28(சகோ. நெவில் தொடர்ந்து, “இன்றிரவு சகோ. பிரன்ஹாம் பிரசங்கிக்காவிட்டால், சகோ. வேயில் பிரசங்கிக்கும்படி அவரைக் கேட்டுக் கொண்டேன். அவர் சகோ. பிரன்ஹாமுடன் இக்கூட்டங்களில் தம்மை சம்பந்தப்படுத்திக் கொண்டவராதலால்,அவர் வழி - இந்த வழி - என்னவென்பதை அறிந்திருக்கிறார். சகோ. வேயில் இங்கு வந்திருப்பதில் நமக்கு பெருத்தமகிழ்ச்சி. இவரை நான் பாராட்டி மதிக்கிறேன் - நான் மற்ற ஊழியக் காரருக்கும் மற்றவர்களுக்கும் செய்வது போல். இன்றிரவு அவர் பிரசங்க பீடத்துக்கு வந்து நமக்கு செய்தியை அளித்தால், எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாயிருக்கும்''). ஆமென். ('தேவன் ஆசீர்வதிப்பாராக. நாம் சகோ. வேயிலுக்காக ஜெபிப்போம். உங்களில் சிலர் அவர் பேசுவதைக் கேட்டதில்லை. நீங்கள் அவருக்காக ஜெபிப்பீர்கள் என்று நம்புகிறேன்'' என்கிறார்). ஆம். நான் இவ்வளவு நேரம் எடுத்திருக்கக் கூடாது. நான் கூட்டத்தினரின் மன்னிப்பைக் கோருகிறேன். இது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டதென்று நான் அறியவில்லை. சகோ. வேயில், தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. (சகோ. லீ வேயில், ''அது முடிவு செய்யப்படவில்லை. 'நீங்கள் பேசாவிட்டால்' என்று அவர் கூறினார். நீங்கள் வந்து விட்டீர்கள்'' என்கிறார். சகோ. பிரான்ஹாமும் சபையோரும் சிரிக்கின்றனர்- ஆசி). நல்லது, அது நல்லது. அவர் பேசுவதைக் கேட்க எனக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அநேக சமயங்களில் சகோ. வேயில் நான் பேசுவதற்கு முன்பு கூட்டங்களில் பேசியிருக்கிறார். நீண்ட காலமாக அவர் கூட்டங்களின் நிர்வாகப் பொறுப்பை ஏற்று நடத்தி வந்தார். அவர் அருமையான சகோதரன், திறம்பட வேலையை செய்தார். சகோ. வேயில் பேசும் போதெல்லாம், அவர் பேசுவதைக் கேட்க இந்த கூட்டத்தினர் வாஞ்சையுள்ளவர்களாயிருக்கின்றனர் என்பது நிச்சயம். சகோ. வேயிலை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக). 29(சகோ. வேயில் மாற்கு 16: 15-20 வசனங்களையும் மற்ற வேத வசனங்களையும் ஆதாரமாகக் கொண்டு, மாற்கு: 16 ஏன் கிரியை செய்யவில்லை? வேத வசனங்களின்படி, அதை எப்படி கிரியை செய்ய வைப்பது? என்னும் பொருளின் பேரில் எழுபது நிமிடங்கள் பேசுகின்றார் - ஆசி). அநேக காரியங்கள் இங்கு கூறப்பட்டன. அதை சிறப்பாக்க வேறொன்றும் கூற எனக்கில்லை. இன்று காலை நடந்ததற்கு பிறகு, சகோ. வேயில் இந்த செய்தியைக் கொண்டு வரவேண்டுமென்று கர்த்தர் தீர்மானம் செய்தார் என்று நான் உண்மையாக நம்புகிறேன். பாருங்கள், அது அப்படித்தான் இருக்கவேண்டும். அது தேவனிடத்திலிருந்து வந்ததாக நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். அவர் அநேக காரியங்களை கூறினார். அவர் சொன்னதை வைத்துக் கொண்டு நான் இருபது பிரசங்கங்களை இங்கு எழுதி வைத்திருக்கிறேன். அவர் கூறினதற்கு ஆதாரமாக, ஒரு சிறு உதாரணத்தை யோசித்துக் கொண்டிருந்தேன். நாம் என்ன நேரம் என்று அறிந்து கொள்ள கடிகாரத்தை நோக்குகிறோம். கடிகாரத்திலுள்ள பாகங்கள், ஒன்றுக்கொன்று ஒருமித்து இயங்கினாலொழிய, நாம் சரியான நேரத்தை அறிந்து கொள்ள முடியாது. அது சரியா? (சபையோர் 'ஆமென்' என்கின்றனர் - ஆசி). அது போன்று. மூன்றாம் இழுப்பு தேவனுக்கென்று ஏதாவதொன்றைச் செய்ய வேண்டுமானால், நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து, தேவனுக்கு முன்பாக நம்மை தாழ்த்தி நமது தவறுகளை அறிக்கையிட்டு, இவைகளுக்காக ஜெபம் செய்து தேவனை விசுவாசிக்க வேண்டியவர்களாய் இருக்கிறோம். 30தேவன் தம்முடைய ஆவியை பரிசுத்தமில்லாத, அநீதியுள்ள, கீழ்படியாத ஆலயத்தில் வைக்கமாட்டார் என்று சகோ. வேயில் கூறினது உண்மையென்று நான் முற்றிலும் நம்புகிறேன். நமது இருதயங்கள் எல்லா களங்கத்தினின்றும் அக்கிரமத்தினின்றும் கழுவப்பட்டு நாம் தேவனுடைய சமூகத்தில் சுத்தராய் இருப்போமானால், அவர் தமது பரிசுத்த ஆவியைக் கொண்டு நமது மூலம் கிரியை நடப்பித்து, இவைகளை நிறைவேற்றுவார். இன்றிரவு நீங்கள் வீடு திரும்பின பிறகு, அந்த சிறு யூதாவின் நிரூபத்தைப் படிப்பீர்களானால், சகோ. வேயில் இப்பொழுது கூறின எல்லாவற்றையும் நீங்கள் அறிந்து கொள்வீர்கள். யூதா, “பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக் கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நான் தைரியமாய்ப் போராடுகிறேன்” என்றான். அவர்கள் அந்த விசுவாசத்தை விட்டு விலகிச் சென்றனர்- எப்படி பக்தியற்றவர்களாகிய சிலர் பக்க வழியாய் உள்ளே நுழைந்து வஞ்சித்து, தேவனுடைய உண்மையான காரியங்களிலிருந்து அவர்களை வழி விலகச் செய்தனர் என்று. நாம் தேவன் கிரியை செய்ய அனுமதித்தால் மாத்திரமே அவரால் கிரியை செய்ய முடியும். நான் கூறினது போன்று இன்னும் எத்தனையோ அற்புதமான காரியங்கள் உள்ளன. 31உங்களுக்குத் தெரியுமா, ஜனங்கள் வல்லமையைப் பெற விரும்புகின்றனர், ஆனால் உண்மையில் வல்லமை என்றால் என்னவென்றுஅவர்களுக்குத் தெரிவதில்லை. பாருங்கள், அதனுடன் எது சம்பந்தப்பட்டுள்ளது என்பதை அவர்கள் அறிவதில்லை. மேலே செல்லும் வழி எப்பொழுதுமே கீழே உள்ளது. உங்களுக்கு வல்லமை வேண்டுமானால், தேவனுக்கு முன்பாக உங்களை எவ்வளவு தூரம் தாழ்த்த முடியும் என்பதை பாருங்கள். உலகப் பிரகாரமான உங்கள் சிந்தனை அனைத்தையும் அறவே அகற்றி, உங்களை தேவனுக்கு முன்பாக தாழ்த்துங்கள். அப்பொழுது, கட்டிடத்தின் எல்லாவிடங்களிலும் ஓடி மிகுந்த சத்தமிடும் மனிதனைக் காட்டிலும் உங்களுக்கு அதிக வல்லமை இருக்கும். ஏனெனில் உங்களையே நீங்கள் அடக்கி ஆண்டு, கிறிஸ்துவுக்கு உங்களை அர்ப்பணித்து, அவருக்கு முன்பாக உங்களை தாழ்த்த உங்களால் முடிகிறது. அதுவே உண்மையான வல்லமை. அகந்தையில்லாத, உண்மையில் தாழ்மையுள்ள, இனிமையுள்ள சபையை எனக்குக் காண்பியுங்கள். அப்பொழுது தேவனுடைய வல்லமையையும் ஆதரவையும் கொண்ட சபையை உங்களுக்குக் காண்பிப்பேன். அது உண்மை. அது தான் அதற்கு அவசியம், தாழ்மை. நம்மை தேவனுக்கு முன்பாக தாழ்த்தி, நமது மூலம் தேவன் கிரியை செய்ய அவரை அனுமதித்தல். நாம் மிகுந்த சத்தமிட வேண்டிய அவசியமில்லை. 32என் தந்தை கூறினது போன்று, அவர் வண்டியை வயல் வழியாக கொண்டு சென்ற போது, ஒவ்வொரு முறை அவர் மேடான பாகத்தின் மேல் மோதினபோது, வண்டி பயங்கரமாக குலுங்கினது. ஆனால் திரும்பி வரும் வழியில் அவர் அதே மேடான பாகத்தின் மேல் மோதின போது, வண்டி குலுங்கி சத்தமிடவில்லை. ஏனெனில் அது அநேக நன்மையான பொருட்களால் நிறைந்திருந்தது. அது முற்றிலும் உண்மையென்று நான் கருதுகிறேன். பாருங்கள், தேவனுடைய நன்மையான காரியங்களால் நாம் நிறைந்திருக்கும் போது, ஆவியின் கனி நமது மூலம் வெளிப்படும். 1 கொரிந்தியர் 13-ம் அதிகாரத்தில் பவுல், ''என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை“ என்று குறிப்பிடுகிறான். பாருங்கள், அதை நாம் செய்ய வேண்டும். 33எல்லாவற்றிற்கும் மேலாக, நமதுஆத்துமாக்களுக்கு நாம் தனிப்பட்ட விதத்தில் தேவனுக்கு முன்பாக உத்திரவாதமுள்ளவர்களாய் இருக்கின்றோம். பாருங்கள், அது நீங்கள் பரலோகத்துக்கு செல்லுதல், நான் போகிறேன், அல்லது அவர் போகிறார் என்றல்ல. நீங்கள் போகின்றீர்கள், பாருங்கள், நீங்கள் முதலாவதாக. இதற்கு நீங்கள் கவனம் செலுத்தி, கர்த்தருக்கு முன்பாக இனிமையாக வரவேண்டியவர்களாயிருக்கிறீர்கள். தன்னைத் தாழ்த்துகிற எந்த மனிதனையும் தேவன் உயர்த்துகிறார் என்பது நான் கண்டறிந்த உண்மை. தனக்கு எல்லாம் தெரியும் என்று மார்பை உந்திக்கொண்டு நடக்கும் மனிதனிடம் நீங்கள் ஒன்றும் கூற முடியாது. அவன் அகந்தையுள்ளவன். அவன் எதையும் அடைவதில்லை. ஆனால் தன்னைத் தாழ்த்தி இனிமையாய் நடக்கும் மனிதனை எடுத்துக் கொள்ளுங்கள். 34ஒரு சபையை உண்டாக்கிக் கொண்டிருக்கும் ஒரு மனிதனிடம் அன்றொரு நாள் நான் பேசிக் கொண்டிருந்தேன். அவர்கள் ஒரு ஸ்தாபனத்திலிருந்து வெளி வந்தவர்கள். அது சகோதரன் போஸ். அவர்கள் நீண்ட காலமாக அந்த மகத்தான சபையில் இருந்தனர். கர்த்தர் அவர்களை ஆசீர்வதித்து வந்தார். அதன் பிறகு அதிலிருந்த மக்கள் மற்றவர்களைப் போல் மெருகேற்றப்பட்டு, அதை ஒரு ஸ்தாபனமாக்க முனைந்தனர். அவர்கள் அப்படி செய்த போது... இந்த தாழ்மையுள்ள கிறிஸ்தவர்கள் அதை விரும்பவில்லை. அவர்களுடைய வாழ்நாள் முழுவதும், அதற்கு விரோதமாக அவர்கள் கற்பிக்கப்பட்டு வந்தனர். எனவே அவர்கள் வெளி நடந்தனர். இப்பொழுது அவர்களுக்கு ஒரு குழு உள்ளது. கர்த்தர் அவர்களை ஆசீர்வதித்து, அவர்கள் மறுபடியும் நான்கு அல்லது ஐந்தாயிரம் பேர்களை கொள்ளும் ஒரு இடத்தில் கூடுகின்றனர். 35அன்றொரு நாள் அவர்கள் என் சபை அலுவலகத்திற்கு வந்திருந்தனர். அவர்களுடைய தலைவர்களில் ஒருவரான சகோ. கார்ல்சனும் மற்றவர்களும் ''சகோ. பிரன்ஹாமே, நாங்கள் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டனர். நான், ''மற்ற ஸ்தாபனங்களில் நன்மதிப்பு பெறாத ஒரு நல்ல, உத்தமமான, இனிமையான, ஜீவனை வாழ்ந்து காட்டும் சகோதரனை உங்கள் மேய்ப்பனாக தெரிந்து கொள்ளுங்கள், தேவன் மற்றவைகளைப் பார்த்துக் கொள்வார்'' என்றேன். பாருங்கள், நான், ''ஆடுகளை போஷிக்கும் ஒரு நல்ல மேய்ப்பனை, எல்லாவற்றிலும் தாழ்மையாயிருப்பவரை தெரிந்த கொள்ளுங்கள். தேவன் மற்றவைகளை கவனித்துக் கொள்வார். எல்லாம் தெரிந்து பெரிய மனிதன் வந்து, இது இப்படியிருக்க வேண்டும் என்று சொல்லி சீர்படுத்துவதல்ல. அது ஒருபோதும் கிரியை செய்யாது. இப்படிப்பட்ட தாழ்மையுள்ள ஒருவரையே தெரிந்துகொள்ள வேண்டும்'' என்றேன். அது தான், சபையிலுள்ள ஒவ்வொரு பாகமும் இசைவாக இயங்கவேண்டும். நீங்கள் உங்கள் பாகத்தை வகிக்க வேண்டும், எனவே நாம் எந்த நேரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதைக் காண்கிறோம். நாம் நினைப்பதைக் காட்டிலும் அருகாமையில் இருக்கக்கூடும். 36இப்பொழுது, நாம் சகோ. வேயிலைப் பாராட்டுகிறோம். அல்லவா? (சபையோர் 'ஆமென்' என்கின்றனர் - ஆசி). சகோ. வேயில், கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்களுக்கு நன்றி, இன்றிரவு இந்த மகத்தான செய்தியை எங்களுக்கு அளித்ததற்காக நாம் கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறோம். சில நிமிடங்களுக்கு முன்பு ஒரு குறிப்பு எனக்கு கிடைத்தது. சகோதரிகளில் ஒருத்தி அவள் கண்ட சொப்பனத்தை என்னிடம் கூற விரும்புகிறாள். சகோதரியே, அந்த சொப்பனத்தை எழுதி எனக்கு அனுப்பினாள், நான்... கர்த்தர் அவளுக்கு சில உண்மையான சொப்பனங்களை அருளியிருக்கிறார். நாங்கள் எல்லா சொப்பனங்களையும் ஏற்றுக் கொள்ளுகிறதில்லை. இல்லவே இல்லை. ஆனால் அவை தேவனால் உண்டானவைகளாயிருந்தால், அது தேவன் எங்களுடன் பேசுதல் என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறோம்..... அது அந்நிய பாஷைகள் பேசுதல் போல், அதை நாங்கள் நம்புவதில்லை. ஆனால் அதற்கு அர்த்தம் உரைக்கப்பட்டு, இனி நடக்கப்போகும் ஒன்றை அறிவித்து, அது நிறைவேறுவதை நாங்கள் கண்டால், அதற்காக நாங்கள் கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறோம். பாருங்கள்? 37இது அமைதியாகவும் இனிமையாகவும் கர்த்தருடைய ஒழுங்கின்படியும் ஓடிக் கொண்டிருக்க நாங்கள் விரும்புகிறோம். எனவே ஞாபகம் கொள்ளுங்கள், ஒருக்கால் நீங்கள் கடிகாரத்தின் முக்கிய கம்பிச்சுருளாக (mainspring) இருக்கலாம், அல்லது சிறு முள்ளாகவோ, அல்லது கைக்கடிகாரத்தின் வேறு சிறு பாகமாகவோ சாவியாகவோ அல்லது சுவர் கடிகாரத்தின் மணிகாட்டும் முள்ளாகவோ இருக்கலாம். அது என்னவாயினும், அது நிறைவேறுவதற்கென நாம் அனைவரும் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்துடன் இசைவாக இயங்க வேண்டியவர்களாயிருக்கிறோம். யோசித்துப் பாருங்கள் நாம் வல்லமை என்றழைக்கும் வரங்கள் பெரிதாயிருக்குமானால், “மலைகளைப் பேர்க்கதக்கதாகச் சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை'' என்று பவுல் கூறினதை யோசித்துப் பாருங்கள். நாம், ”எனக்குப் புரிந்தாலும்... நான் வேதத்தை அறிந்திருந்தால் நலமாயிருக்கும்'' என்கிறோம். “நான் தேவனுடைய சகல இரகசியங்களையும் அறிந்திருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை. பாருங்கள், நான் முன்னேறவே இல்லை'' பாருங்கள், முக்கியமான காரியம் தேவனுடைய அன்பு. அதனுடன் உங்களைத் தாழ்த்துங்கள். 38இத்தனை ஆண்டுகளாக உலகம் பூராவும் சுவிசேஷ வேலையில் ஈடுபட்டு பல்வேறு மக்களைக் கண்ட நான், உள்ளே நுழையும் வாசலைக் குறித்து சிறிது அறிந்திருக்க வேண்டும். நீங்கள் தேவனுடன் தொடர்பு கொள்ள விரும்பினால், அகந்தையுள்ள ஆவி உங்களைப் பிடிக்க அனுமதிக்க வேண்டாம். எந்த குரோதமும் உள்ளே வர அனுமதிக்காதீர்கள். யார் என்ன செய்த போதிலும், அவர்கள் தவறு செய்தால், அவர்களிடம் விரோதம் பாராட்ட வேண்டாம். பாருங்கள்? நீங்கள் இனிமையாயும் தயவாயும் இருங்கள். நீங்கள் பாவத்திலிருந்த போது தேவன் உங்களில் அன்பு கூர்ந்தார் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். தேவனுடைய ஆவி உங்களுக்குள் இருக்குமானால், மற்றவர் தவறு செய்தபோதிலும் அவரை நீங்கள் நேசிப்பீர்கள். பாருங்கள், அவர்களுக்காக ஜெபியுங்கள், ஒருவரிலொருவர் அன்பு கூருங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக தேவனிடத்தில் அன்பு கூருங்கள், ஒருவரிலொருவர் அன்பு கூருங்கள். தேவனிடத்தில் தாழ்மையாயிருங்கள், ஒருவருக்கொருவர் தாழ்மையாயிருங்கள். தேவன் அதை ஆசீர்வதிப்பார். அவர் என்ன செய்வாரென்று கூறுவது கடினம். வழக்கமாக ஒரு சபையின் எண்ணிக்கை அதிகரித்து, அது பெரிதாகிக் கொண்டு வர ஆரம்பித்தால், அப்படி ஏதாவதொன்று நடந்தால், அவர்கள் உண்மையானதை விட்டு அகன்று சென்றுவிடுகின்றனர். 39நான் முதலில் தொடங்கி, கர்த்தர் அந்த நதியில் எனக்குத் தோன்றி அதை கூறினாரல்லவா, அதை நிகழப் பண்ணினது எது தெரியுமா? சகோ. வேயில் அநேக ஆண்டுகளுக்கு முன்பு கனடாவில் வெளியான ஒரு செய்தித்தாளில் கர்த்தருடைய தூதன் நதிக்கரையில் தோன்றின செய்தியைக் கண்டார் என்று நினைக்கிறேன். அது 'அஸோஸியேட் பிரஸ்' என்னும் செய்தித்தாள். அந்த செய்திக்கு: “ஞானஸ்நானம் கொடுத்துக் கொண்டிருந்த போது, உள்ளூர் போதிகரின் மேல் தெய்வீக ஒளி'' என்னும் தலைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. அதை செய்தது எது தெரியுமா? வீதியின் மறுபுறத்தில் சுமார் இரண்டாயிரத்து ஐந்நூறு பேரைக் கொள்ளும் ஒரு கூடாரம் இருந்தது. அப்பொழுது நான் ஒரு இளைஞன். எல்லாவிடங்களிலிருந்தும் போதகர்கள் வந்து, “சகோதரனே, இங்கு ஒரு நிமிடம் வாருங்கள். இந்த ஜனங்களை ஒரு மனதுடன் எப்படி வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? அவர்கள் ஒருவரிலொருவர் அன்பு கூருகின்றனரே... இப்படி ஒருவரிலொருவர் அன்பு கூரும் ஜனங்களை நான் கண்டதேயில்லை'' என்பார்கள். 40அது கர்த்தரால் உண்டானது. இந்த சபை அதன் பேரில் தான் நிறுவப்பட்டது- தெய்வீக அன்பின் பேரிலும், ஒருவர் மற்றவர் பேரில் வைத்துள்ள சகோதர அன்பின் பேரிலும். ஓரிடத்தை விட்டு புறப்படும்போது, அவர்களுடன் நான் கைகுலுக்கும் சமயத்தில், ஒருவரைவிட்டு ஒருவர் பிரிவதைத் தாங்க முடியாமல் அவர்கள் குழந்தைகளைப் போல் கதறுவார்கள். அவர்கள் அவ்வளவு அதிகமாக ஒருவரிலொருவர் அன்பு கூர்ந்தனர். அவர்கள் வீட்டுக்கு நான் விஜயம் செய்யும் போது, வேதாகமம் திறந்து வைக்கப்பட்டு, கண்ணீரினால் நனைந்திருப்பதை நான் கண்ட நேரங்கள் உண்டு. இரவு நேரங்களில் அவர்களுடைய வீடுகளுக்கு செல்லும்போது, பெற்றோர் ஒன்று கூடி, பிள்ளைகள் அவர்களைச் சுற்றி தரையில் இருப்பார்கள். பெற்றோர்கள் முழங்கால்படியிட்டு அழுது ஜெபிப்பார்கள். நான் வாசற்படியில் நின்று காத்திருப்பேன், காத்திருப்பேன், காத்திருப்பேன். அவர்கள் ஜெபத்தை நிறுத்தமாட்டார்கள். நான் படிக்கட்டில் உட்கார்ந்து, அவர்களுக்காக காத்திருக்கும் நேரத்தில், நானே ஜெபிக்கத் தொடங்கி விடுவேன். அப்படித்தான் நின்று கொண்டு இந்த பழைய பாடலைப் பாடுவது வழக்கம்: %நம் இருதயங்களை கிறிஸ்தவ அன்பினால் %பிணைக்கும் கட்டு ஆசீர்வதிக்கப்படுவதாக %ஒரே சிந்தையுடையவர்களின் ஐக்கியம் %மேற்கூறியது போன்றிருக்கும் %நாம் பிரிந்து செல்லும்போது %நமக்கு உள்ளில் வேதனை தருகிறது %நாம் அப்பொழுதும் இருதயத்தில் இணைக்கப்பட்டு %மறுபடியும் சந்திப்போமென நம்புகிறோம். 41கிறிஸ்துவுக்குள் என் இருதயத்தில் மிகுந்த களிப்பைக் கொண்டவனாக இதைக் கூறுகிறேன். இன்றிரவு அநேகர் அந்த மகத்தான உயிர்த்தெழுதலை எதிர் நோக்கினவர்களாய் இந்த கல்லறைகளில் படுத்து நித்தரை செய்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் உயிர்த்தெழுந்த பின்பு அவர்களை நாம் சந்திப்போம். பரிசுத்த ஆவி இந்த இடத்தை விட்டுபோகாதிருப்பதாக! அது போய்விடுமானால், உங்கள் போதகர் எவ்வளவு சொல்லாற்றல் படைத்தவராயிருந்தாலும், அவர் எவ்வளவு நன்றாக தேவனுடைய வார்த்தையை கொண்டு வந்தாலும் எனக்குக் கவலையில்லை. ஏனெனில் பரிசுத்த ஆவி வருத்தத்தோடு இங்கிருந்து போய்விட்டார். பாருங்கள்? ஆனால் நாம் ஐக்கியப்பட்டு, இவ்வனைத்தையும் பொதுவாக பெற்று, ஒருவரிலொருவர் அன்பு கூருவோமானால், தேவன் நம்மோடு சேர்ந்து கிரியை செய்வார். ஜனங்கள், “நீங்கள் தாழ்மையுள்ள சபையை, உண்மையில் தேவனை நேசிக்கும் சபையை காண விரும்பினால், அந்த கூடாரத்துக்கு ஒரு முறை சென்று பாருங்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் கொண்டுள்ள அக்கறையையும் மதிப்பையும் பாருங்கள். சுவிசேஷம் பிரசங்கிக்கப்படும் போது அவர்கள் எவ்வளவு பயபக்தியாக அதை கேட்கின்றனர். அங்கு எல்லாமே ஒழுங்காக அமைந்துள்ளது'' என்று கூறும் நேரத்துக்காக நாம் காத்திருக்கிறோம். ஆம், அவர்கள் அதைப் பார்த்து, நாம் எந்த நேரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதைக் கண்டு கொள்வார்கள். தேவனுடைய ஆவி உங்கள் மத்தியில் அசைவாடி, மகத்தான அடையாளங்களும் அற்புதங்களும் நிகழ்வதை நீங்கள் காண்பீர்கள். அது ஒருமித்து இயங்கும் போது, நேரத்தை அறிவிக்கிறது. அது இயங்காமல் போனால், கடிகாரம் நின்றுவிடுகிறது. அது நேரத்தை அறிவிக்காது. எனவே நாம் எந்த நேரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை அறிய விரும்பினால், அனைவரும் சுவிசேஷத்தில் ஒன்றாக பணி புரிந்து, ஒருவரிலொருவர் அன்பு கூர்ந்து, தேவனிடத்தில் அன்பாயிருங்கள். அப்பொழுது கடிகாரத்தின் கைகள் தாமாகவே நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் நேரத்தை அறிவிக்கும். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? (சபையோர் “ஆமென்'' என்கின்றனர் - ஆசி). நிச்சயமாக. ஆமென். கர்த்தர் உங்களை அளவில்லாமல் ஆசீர்வதிப்பாராக. 42இப்பொழுது மறந்து விடாதீர்கள், இந்த வாரம் இதை செய்யுங்கள். வியாதிப்பட்டவர் யாரையாகிலும் நீங்கள் அறிந்திருந்தால், அவர்களிடம் சென்று, ''அன்பார்ந்தவரே, உம்மை ஒன்று கேட்க விரும்புகிறேன். ஞாயிறு காலையில் கூடாரத்தில் நாங்கள் வியாதியஸ்தருக்காக ஜெபம் வைத்துள்ளோம். நீர் சிறிது காலமாக வியாதியாயிருக்கிறீர், நீர் வரவேண்டுமென்று விரும்புகிறோம்'' என்று கூறுங்கள். “நான் வர விரும்புகிறேன். நான் வர வேண்டுமென்று எப்பொழுதும் விருப்பம் கொண்டிருப்பவன்.'' “ஞாயிறு இரவன்று, அங்குள்ள ஒரு சகோதரன் அளித்த செய்தியைக் கேட்டேன். அவர், நாம் சொஸ்தமடையும்படிக்கு நம் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம் செய்ய வேண்டும் என்பதைக் குறித்து பேசினார். யாக்கோபு 5:14, 13, 14, 15 வசனங்கள். பாருங்கள், நாம் சுகம் பெற வருவதற்கு முன்பே நம்முடைய குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம் பண்ண வேண்டும். பாருங்கள்? அதைக் குறித்து தான் சகோ. வேயிலும் இன்றிரவு பேசி, மலைப் பிரசங்கத்தை மாற்கு 16-ம் அதிகாரத்துடன் ஒன்றிணைத்தார். அதை ஒன்றாக இணைத்தால், நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள், சுகம்பெறுதல் நிகழ்கிறது. 43இயேசுவைப் பாருங்கள், அவர் அன்பே உருவானவர். பாருங்கள்? அவர் மாம்சத்தில் தோன்றின தேவன். தேவன் தம்மை அவர் மூலமாய் வெளிப்படுத்தினார். எனவே அற்புதங்கள் நடந்ததில் வியப்பொன்றுமில்லை. அவருடைய தாழ்மையான, பிரதிஷ்டை செய்யப்பட்ட வாழ்க்கை, அவர் தேவனாயிருப்பதை விட்டு, மனிதனாக இவ்வுலகில் வந்தார். அவர் தமது மூலம் தேவனை வெளிப்படுத்தினார். அதுதான் அவரை தேவனாக்கினது. ''என்னை பொறுத்த வரையில், இயேசுவை தேவனாக செய்தது, அவர் தம்மைத் தாழ்த்தின விதமே. அவர் அவ்வளவு பெரியவர், இருப்பினும் அவர் அவ்வளவு தாழ்ந்தவராக ஆனார்'' என்று நான் அடிக்கடி கூறுவதுண்டு. பாருங்கள்? அது உண்மை. கர்த்தர் உங்களை அதிகமாய் ஆசீர்வதிப்பாராக. நாம் எழுந்து நிற்போம். நாம் கலைந்து செல்லும் முன்பு இந்த பாடலைப் பாட முயல்வோம் (சகோதரியே, அது உனக்குத் தெரியாமல் இருக்கலாம்). நமது இருதயங்களைப் பிணைக்கும் கட்டு. அதை ஒரு முறை பாடுவோம், பாடுவீர்களா? சுருதிகொடு. நம் இருதயங்களை கிறிஸ்தவ அன்பினால் பிணைக்கும் கட்டு ஆசீர்வதிக்கப்படுவதாக ஒரே சிந்தையுடையவர்களின் ஐக்கியம் மேற் கூறியது போன்றிருக்கும். 44நாம் கடைசி சரணத்தை பாடும் போது, ''நாம் பிரிந்து செல்லும்போது“ என்னும் வரியைப் பாடும் போது, ஒருவரோடொருவர் கைகுலுக்கி, ''தேவன் உங்களை ஆசீர்வதிப்பார், சகோதரனே, சகோதரியே. இன்றிரவு உங்களுடன் இருந்ததில் எனக்கு மகிழ்ச்சி'' என்று கூறுங்கள். பாருங்கள், அப்படி ஏதாகிலும் ஒன்று சொல்லிவிட்டு திரும்பி விடுங்கள். இப்பொழுது நாம் பாடுவோம். நாம் பிரிந்து... (சகோ. நெவில், தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக) நமக்கு உள்ளில் வேதனை தருகிறது. நாம் அப்பொழுதும் இருதயத்தில் இணைக்கப்பட்டு மறுபடியும் சந்திப்போமென நம்புகிறோம். நாம் எவ்வளவாக கர்த்தராகிய இயேசுவை நேசிக்கிறோம்! இல்லையா? (சபையோர் ''ஆமென்'' என்கின்றனர் - ஆசி). நாம் சந்திக்கும் வரைக்கும்! நாம் சந்திக்கும் வரைக்கும் நாம் இயேசுவின் பாதங்களில் சந்திக்கும் வரைக்கும், நாம் சந்திக்கும் வரைக்கும் நாம் சந்திக்கும் வரைக்கும், நாம் சந்திக்கும் வரைக்கும் தேவன் உங்களுடன் இருப்பாராக. இப்பொழுது நாம் கண்களை மூடி அதை ஆவியில் பாடுவோம். நாம் சந்திக்கும் வரைக்கும்! நாம் சந்திக்கும் வரைக்கும் நாம் இயேசுவின் பாதங்களில் சந்திக்கும் வரைக்கும், நாம் சந்திக்கும் வரைக்கும்! நாம் சந்திக்கும் வரைக்கும், “நாம் சந்திக்கும் வரைக்கும் தேவன் உங்களுடன் இருப்பாராக. 45நாம் தலைவணங்கியிருக்கும் வேளையில் நாம் பிள்ளைகளே, தேவனுடைய பிள்ளைகள். அதை மெளனமாக இசைப்போம் (சகோ. பிரன்ஹாமும் சபையோரும் தேவன் உங்களுடன் இருப்பாராக என்னும் வரியை மெளனமாக இசைக்கின்றனர் - ஆசி). ஓ, அது எவ்வளவாக தேவனுடைய ஆவியை இங்கு கொண்டு வருகிறது! ஆதி காலத்தில் அவர்கள் கற்பாறைகளின் மேல் உட்கார்ந்து ஆராதித்ததை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? நாம் சந்திக்கும் வரைக்கும் தேவன் உங்களுடன் இருப்பாராக! நாம் தலை வணங்கியிருக்கும் இவ்வேளையில், நமது மத்தியில் புதிதாக வந்துள்ள சகோ. ஆலனை ஜெபம் செய்து கூட்டத்தை முடிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். சகோ. ஆலன்.